Ad Widget

பொலித்தீன் தடையை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ஜனவரி மாதம் முதல் கடுமையான நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.

20 மைக்ரோனுக்கு குறைவான அடர்த்தியைக் கொண்ட பொலித்தீனை தயாரிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது மற்றும் வைத்திருப்பது போன்றவை 2007ஆம் ஆண்டே தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தப் பின்னணியிலேயே பொலித்தீன் பாவனை மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தற்போது கூறுகின்றது.

ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்த சுற்றுச்சூழல் நிபுணரான வழக்கறிஞர் ஜகத் குணவர்தன, அந்த சிக்கல்களை தீர்க்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

“பொலித்தீன் பாவனைக்கான கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுவதனால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது” என்றார் ஜகத் குணவர்தன.

“தேசிய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அதிகாரிகளால் மட்டும் பொலித்தீன் பாவனையை கண்காணிப்பது சுலபம் இல்லை” என்றும் கூறினார் வழக்கறிஞர் ஜகத் குணவர்தன.

ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரவுள்ள பொலித்தீன் பாவனைக்கு எதிரான நடவடிக்கைகளுடன், பொலித்தீனுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“பொலித்தீனுக்கு பதிலாக பாவனைக்கு வரும் பொருட்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவை சுகாதாரத்திற்கு கேடு ஏற்படுத்தாத- குறைந்த விலையில்- இலகுவில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்றார் ஜகத் குணவர்தன.

பொலித்தீனை பயன்படுத்தும்போதும் அவற்றை அழிக்கும்போதும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts