Ad Widget

பொறுமையாக இருக்கவும் – கூட்டமைப்புக்கு மோடி ஆலோசனை!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று மாலை கொழும்பு தாஜ் ஹோட்டலில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

modi-tna-2

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இனப்பிரச்சினை தீர்வு, காணிப் பிரச்சினை, கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை உள்ளிட்டவைகள் குறித்து இந்திய பிரதமருக்கு தெளிவுபடுத்தியதாக சந்திப்பில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இந்த விடயங்களை செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுத்து கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என இந்திய பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

அதற்கு பதில் அளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிய அரசாங்கம் அந்த விடயங்களை செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துமாறும் கூறியதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மேலும் எல்லாவற்றையும் உடனடியாக செய்து முடிக்கலாம் என நம்ப வேண்டாம் எனவும் படிப்படியாக செய்து முடிக்கப்படும்வரை பொறுமை காக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Related Posts