Ad Widget

பொருள்களின் விலைக்குறைப்பு விவரம் வர்த்தமானியில்!

புதிய அரசின் இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் விலை குறைப்பு செய்யப்பட்ட சிமெந்து உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வர்த்தமானியில் பிரசுரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி நேற்று (19) நள்ளிரவு இந்த அறிவித்தல்கள் அனைத்தும் இன்றைய வர்த்தமானியில் உள்ளடங்கும் வகையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து விலை குறைப்பு செய்யப்பட்ட பொருள்களும் அவற்றின் தற்போதய விலைகளுடன் வர்த்தமானியில் உள்வாங்கப்படுமென கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

நேற்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் அது தொடர்பான அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அவ்வகையில் இலங்கையில் நுகர்வோர் அதிகாரசபையினால் பொருள்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலை, 50 கிலோ கிராம் சிமெந்து பையொன்று 840 ரூபா விலையிலும், 450 கிராம் பாண் 54 ரூபாவாகவும், சீனி ஒரு கிலோ 90 ரூபாவாகவும், 400 கிராம் பால் மா பைக்கற்றின் விலை 325 ரூபாவாகவும் ஒரு கிலோ பால் மா பைக்கற்றின் விலை 810 ரூபாவாகவும், சஸ்டஜன் 400 கிராம் 1500 ரூபாவாகவும், கோதுமை மாவின் விலை 90 ரூபாவாவும், பயறு ஒரு கிலோ 280 ரூபாவாகவும், ரின்களில் அடைக்கப்பட்ட மீன் 400 கிராம் 260 ரூபாவாகவும், விலைகள் குறைக்கப்பட்டு அவைகளின் தற்போதய விலைகளும் இன்றைய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts