வவுனியாவில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியாவை விடுத்து வேறு மாவட்டத்தில் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கக்கூடாது என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பாக தீர்மானத்தினை எடுப்பதற்காக வவுனியா மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். வரதகுமார் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த 20 பொது அமைப்புக்கள் கூடி பல வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் 3 தீர்மானங்களை எடுத்திருந்ததுடன் அவற்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் நாளை வெள்ளிக்கிழமை கையளிப்பது எனவும் தீர்மானத்தனர்.
இதன்போது வவுனியா மாவட்டத்தினை விட்டு பொருளாதார மையம் வேறு இடத்தில் அமைக்கப்படக்கூடாது, வவுனியா நகருக்கு வடக்கு பக்கமாக ஏதேனும் ஒரு பகுதியில் அமைக்கப்படவேண்டும் மற்றும் இது தொடர்பாக இறுதி முடிவெடுப்தற்காக வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்பாக கூட்டப்படவேண்டும் என்ற தீர்மானங்களே எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 35 பேர் கலந்துகொண்டு இக் கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக வவுனியாவில் நகருக்கு வடக்கு பக்கமாக எப்பகுதியில் பொருளாதார மையம் அமைக்கப்பட்டாலும் அதனை ஏகமனதாக ஏற்றுக்கொள்வது எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.