Ad Widget

பொருத்து வீட்டுத் திட்டத்தை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை: சுவாமிநாதன்

துரித மீள்குடியேற்ற செயற்றிட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 9 ஆயிரம் மில்லியன் ரூபாவில், 5811 வீடுகளும், 2,533 மலசலகூடங்களும் அமைக்கப்பட்டிருப்பதுடன், 348 பொது கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்த தகவல்களைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றும் போது,

பகுதியளவில் சேதமடைந்த 905 வீடுகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 53 உள்ளூர் விதிகளும், 29 வைத்தியசாலைகள் மற்றும் 264 பாடசாலை கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 3,313 நீர் இணைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, பனைவளப் பயன்பாடு மற்றும் சுயவேலை வாய்ப்புத் தொடர்பில் 7,287 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 8,975 வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கின்றன.

துரித மீள்குடியேற்றத் திட்டத்திற்காக ரூபா. 14,050 மில்லியன் இவ்வமைச்சின் கீழ் 2016 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் எல்லைக் கிராமங்களான புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் முகம்கொடுத்து வரும் இடர்களை நீக்கும் நோக்குடன் கடந்த வருடத்தில் பல்வேறு மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் எமது அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அண்மையில் கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின்னர் 90 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அதிநவீன தீயணைப்பு தொகுதியினை வழங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் ரூபா 80 மில்லியன் கிளிநொச்சி சந்தைத் தொகுதி கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டது. எனினும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுமானத்திற்கான மதிப்பீடு மிக அதிகமாக இருந்ததால் அதன் அமைப்பை மாற்றுமாறு கேட்கப்பட்டு உள்ளதுடன் ஒதுக்கப்பட்ட பணம் அத்தியாவசிய தேவை கருதி அந்த மாவட்டத்தின் வீட்டுத் தேவைக்காக மாற்றப்பட்டுள்ளது.

துரித மீள்குடியேற்ற திட்டத்திற்கு உரிய எல்லாக் கருத்திட்டங்களும் சர்வதேச சமூகத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையும் உள்ளடக்கி இருந்தது.

துரித மீள்குடியேற்ற திட்டத்தின் செயற்பாடுகள் 30 வருட போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கானமுன்னெடுப்புக்களை மேற்கொள்ள குறைந்த பட்சம் 15,000 மில்லியன் ரூபா தேவை என அமைச்சு முன்மொழிந்திருந்ததுடன் இது சர்வதேச அழுத்தத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே 165,000 உள்ளக இடம்பெயர்ந்தோர் குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 17,000 குடும்பங்களுக்கு மாத்திரம் வீட்டுகள் பயனாளிகளின் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. துரிதப்படுத்த மீள்குடியேற்றத்திட்டத்தில் 65,000 பொருத்து வீட்டுத்திட்டம் 100 சதவீத நிதிப்பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட இருந்தது.

இறுதியில் அரசியல் தலையீடு காரணமாக 6,000 பொருத்து வீட்டுத்திட்டத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. எனவே இத்திட்டத்தினை என்னால் எதிர்பார்க்கப்பட்ட முறையில் இவ்வாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது எனவும் சுவாமி நாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts