Ad Widget

பொருத்துவீட்டு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்காது : சுமந்திரன்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு பொருத்து வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு முனைந்துவருவதாக நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான செலவீனத்தை விட மூன்று மடங்கு அதிக நிதியை செலவுசெய்து 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை அரசாங்கம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கின் மீள்குடியேற்ற உள்ளிட்டவற்றுக்கான ஒதுக்கீடுகள் போதுமானது அல்லவென குறிப்பிட்ட அவர், இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் தொடர்பில் சிவில் அமைப்புக்களுடன் தாம் ஆராய்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கான மாற்று திட்டமொன்றை சபையில் சமர்ப்பித்த சுமந்திரன், இதன்பிரகாரம் ஒரு வீட்டை 8 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கும் பட்சத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் வீடொன்றை நிர்மாணிக்க முடியும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ஒரு பில்லியன் ரூபா செலவில் வீடுகள் மற்றும் கடைத்தொகுதிகளை கொண்ட கலப்புவீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான ஒன்றை மக்கள் கேட்கவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலாக வடக்கு மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts