Ad Widget

பொன்னாலை, திருவடிநிலையில் கடற்றொழிலாளிகளை அச்சுறுத்தும் கடற்படையினர்

பொன்னாலை – திருவடிநிலையில் இரண்டு கிலோ மீற்றர் நீளமான கடற்கரை பிரதேசம் கடற்படையினரால் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, கடற்றொழிலுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமாகவுள்ள சிறியளவு கரையோரப் பகுதியிலும் கடற்றொழிலில் ஈடுபடக்கூடாதென கடற்படையினர் உத்தரவிட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இப்பகுதியில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளமான கடற்கரையோரம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு பாரிய கடற்படைமுகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் குறித்த முகாமிற்காக கரையோரத்திலிருந்து கடலைநோக்கி ஒரு கிலோ மீற்றர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பகுதிக்குள் யாரும் நுழையவோ, கடற்றொழிலில் ஈடுபடவோ அனுமதியில்லை என கடற்படையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் இந்தப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 85 குடும்பங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அயற்கிராம கடற்றொழிலாளர்களால் நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 300 மீற்றருக்கும் குறைவான கரையோரத்தில் மிகுந்த நெருக்கடிக்குள் மேற்படி 85 குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்களும் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்தப்பகுதியிலும் கடற்றொழிலில் ஈடுபடக் கூடாதென கடற்படையினர் உத்தரவிட்டுள்ளதுடன், அப்பகுதியிலுள்ள வாடிகள், கருவாடு உலர்த்தும் தொட்டிகள், படகுகள் போன்றவற்றை அங்கிருந்து அகற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக நம்பியிருக்கும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை நேற்று வியாழக்கிழமை பொன்னாலை கிருஸ்ணன் கோவிலில் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொனறு இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கடற்படையினரின் உத்தரவு குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காமல் கடற்படை அதிகாரிகள் மௌனம் காத்ததுடன், நீண்டநேரத்தின் பின்னர் இது குறித்து ஆராய்ந்து தாம் பதிலளிப்பதாக கூறி சமாளித்தனர்.

இந்நிலையில் கடற்படையினரின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாதெனவும், அவ்வாறு நடைமுறைப்படுத்துவதாயின் வாடிகளையும், படகுகளையும், கடற்படையினரே எடுத்து க்கொள்ளட்டும் என மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளனர்.

தமது அடிப்படை வாழ்வாதரப் பிரச்சினை குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

Related Posts