Ad Widget

பொன்சேகாவுக்கு நடந்ததே எனக்கும் நடக்கும் – மைத்திரிபால

கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து, அப்போதைய பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை இந்த அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது. அவருக்கு நடந்தவற்றை விட பல மடங்கு அதிகமானவை தனக்கு நடக்கும் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithripala-sirisena

ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை, நேற்று புதன்கிழமை கொழும்பு – நாவல பிரதேசத்தில் வைத்து சந்தித்த மைத்திரிபால சிறிசேன, யுத்த வீரன் சரத் பொன்சேகாவே என்று கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவுள்ள பசில் ராஜபக்ஷவினால், அக்கட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக எவரையும் இணைத்துக்கொள்ள முடியவில்லை’ என்று சுட்டிக்காட்டினார்.

ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகாவின் உரிமைகள் மற்றும் சலுகைகளை இல்லாதொழிக்க, மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். நான் அதிகாரத்துக்கு வந்து சில மணி நேரங்களுக்குள் பொன்சேகாவின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன்.

அத்துடன், முன்னாள் இராணுவ தளபதியாக அவருக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள், ஜெனரல் பதவி மற்றும் பதக்கங்களைப் பெற்றுக்கொடுப்பதோடு, இராணுவ தளபதிகளின் பெயர்ப் பட்டியலில் அவருடைய பெயரையும் இணைப்பேன் என மைத்திரிபால கூறினார்.

இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இருக்கவில்லை. அப்போது, பதில் பாதுகாப்பு அமைச்சராக நானே கடமையாற்றினேன். இதன்மூலம், நான் மூன்று முறை பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியுள்ளேன் என்று மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

Related Posts