யுத்த குற்றம் மற்றும் அதற்கு பின்னராக விடயம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருவதாகவும், முன்னாள் படையினருக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட பதவிகளை கௌரவமாக வழங்குவதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜகத் ஜயசூரிய போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அது குறித்த உரிய விசாரணைகள் இடம்பெறுமாயின் ஆதாரங்களை வெளியிட தான் தயார் என்றும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஏனைய அதிகாரிகள் குறித்து தகவல் உள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார் அது உண்மையில் வரவேற்கத்தக்கது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மனித உரிமைகள் பேரவை என்பன இந்தக் குற்றவாளிகளை சர்வதேசத்துக்கு முன்னாள் கொண்டுவந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.