ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பொது மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு அந்தக் காணிகளில் விவசாயம் செய்வதுடன், வியாபாரத்திலும் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சுவாமிநாதன், தனது இந்தக் கோரிக்கைய நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என இராணுவ தளபதியும் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 4200 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எஞ்சிய காணிகளும் உரிய காலப்பகுதியில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், இரண்டாவதாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 96 பேரில் 23 பேர் உடனடியாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு 6 மாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முக்கிய தளபதிகளை விடுவித்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏன் ஏனையோரை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர் என தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருவதாகவும் கூறிய அமைச்சர், இதற்கான பதிலை தன்னால் வழங்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக நான் ஜனாதியுடன் கலந்துரையாடி இதற்கு உரிய பதிலை வழங்குவேன் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.