Ad Widget

பொதுத் தேர்தல், தமிழரின் உடனடித் தேவை குறித்து லண்டனில் உயர்மட்டக் கூட்டம்! – சொல்ஹெய்ம், மங்கள, சுமந்திரன் பங்கேற்பு

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உடனடித் தேவைகள் குறித்தும் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகின்றது.

நேற்று ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் இன்றுவரைக்கும் இடம்பெறும். மேற்படி கூட்டத்தில் சர்வதேச தரப்புச் சார்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹீம் இப்ராஹீம், இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முன்னாள் சமாதானத்திற்கான ஆலோசகர் மார்டீன் சுஷேஞர், இலங்கை அரசு தரப்புச் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிரதிநிதி ஒருவர் மற்றும் தமிழர் தரப்புச் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையின் முக்கியஸ்தர் சுரேன் சுரேந்திரன் உட்படப் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து இரகசிய ஆலோசனைகள் நடத்தப்படுவதாக பொய்யான செய்திகளை சிலர் வெளியிட்டுள்ளனர் என்றும், இதனைத் தாம் நிராகரிப்பதுடன் கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்றும் மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இலண்டன் உயர்மட்டக் கூட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் – இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உடனடித் தேவைகள் குறித்து மாத்திரமே இந்தக் கூட்டத்தில் பேசப்படுகின்றன.

இலண்டன் பேச்சுகள் குறித்து நாங்கள் எதனையும் பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால், தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சில தரப்பினர் பிழையான – பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதனை நாம் அடியோடு நிராகரிப்பதுடன் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சர்வதேச சமூகம் ஆற்றக்கூடிய பங்களிப்புள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர் – என்றார்.

இதேவேளை, இலண்டன் பேச்சுகளில் கலந்துகொண்டவர்கள் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்வது குறித்தே கவனம் செலுத்துகின்றனர் எனவும், அடுத்தகட்ட பேச்சுகள் டுபாயில் நடைபெறவுள்ளன எனவும் உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

Related Posts