Ad Widget

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூவருக்கெதிராக சட்ட நடவடிக்கை

யாழ். பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.நகரப் பகுதியில் இயங்கி வந்த உணவு விடுதி ஒன்றுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 31ஆம் திகதி 3 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்று 3 கிலோ நிறையுடைய சோஸ் பைகள் மற்றும் 200 கிராம் நிறையுடைய 11 ஒடியல்மா பைகளையும் கைப்பற்றி காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தியதாக கூறி குறித்த விடுதி முகாமையாளருக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு ஒன்றரை வருட காலமாக நடைபெற்று வரும் நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவரும் மன்றில் சாட்சியமளிக்கும் போது தாம் குறித்த தினத்தில் அந்த விடுதிக்கு சாப்பிடப் போனதாகவும் அப்போது விடுதி முகாமையாளர் தான் விடுதிக்கான அனுமதி பெற வேண்டி இருப்பதால் விடுதியை பரிசோதித்து ஆலோசனை வழங்குமாறு தம்மைக் கோரியிருந்தார் எனவும் அதற்கமைய விடுதியின் களஞ்சியசாலையை பரிசோதனை செய்த போது அங்கு பயன்படுத்த முடியாத பொருட்கள் பல இருந்ததுடன் பாவனைக்குதவாத தளபாடங்களும் இருந்தமையால் அவற்றைக் கைப்பற்ற வில்லை எனவும் கட்டட அமைப்பில் பல குறைபாடுகள் காணப்பட்ட போது அவற்றைத் திருத்துமாறும் அங்கு வேலை செய்பவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறும் கூறிவிட்டு அடுத்த அறைக்கு சென்றபோது காலாவதியான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்ததனால் அவற்றைக் கைப்பற்றியதாகவும் கூறினார்கள்.

இது தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி சாட்சியமளிக்கும் போது குறித்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமக்கு கீழ் பணியாற்றுவதாகவும் அவர்கள் செய்யும் பணிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும் என்றும் திடீரென பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருப்பின் தன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் அல்லது மாநகரசபை ஆணையாளருக்கு அறிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த விடுதி தொடர்பாக தனக்கும் ஆணையாளருக்கும் அறிவிக்கவில்லை எனவும் சாட்சியமளித்தார்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி கடந்த காலத்தில் குறித்த விடுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றுக்கு பழிவாங்கும் நிகழ்வாக இச்செயற்பாடு இடம்பெற்றதாக தெரியவருவதால் குறித்த வழக்கில் இருந்து முகாமையாளரை விடுவிப்பதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவரும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட குரோதத்துக்கு பழிவாங்கும் முகமாக செயற்பட்டதாக சாட்சியங்கள் தென்படுவதால் பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள் மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தக் கூடாது எனக்கூறி குறித்த மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Posts