Ad Widget

பொதி செய்த மணல் விற்பதற்கு நடவடிக்கை – வடமாகாண முதலமைச்சர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கட்டடத் தேவைகளுக்கு தேவையான மணலை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மணலை பொதி செய்து வழங்குவது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற போது, யாழ். மாவட்டத்தில் கட்டட வேலைகளுக்கும் மற்றும் வீடமைப்புத் திட்ட வீடுகளைக் கட்டுவதற்கும் மணலைப் பெறமுடியாத நிலையிருப்பதாகவும், இதனால் பலர் தொழில் இழந்து இருப்பதாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி சபையில் கோரிக்கை முன்வைத்தார்.

இந்தப் கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

எதிர்காலத்தில் பொதுமக்களின் மணல் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், தேவைக்கு ஏற்ப மணலை பெறும் வகையிலும் மணலை பொதி செய்து விற்பனை செய்வது தொடர்பாக யோசனைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் மகேஸ்வரி நிதியத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு பொலிஸாராலும் மற்றும் வடமாகாண சபையினரின் தலையீட்டாலும் நிறுத்தப்பட்டது.

மகேஸ்வரி நிதியத்தினர் முறையற்ற அனுமதியைப் பெற்று மணல் அகழ்வில் ஈடுபட்டது என்றும், சூழலைப் பாதிக்கும் வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் மூலம் மணல் அகழ்வு நிறுத்தப்பட்டது.

இதனால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பல கட்டட வேலைகள் மணல் இல்லாத காரணத்தால் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளன. வீட்டுத்திட்டங்களும் உரிய காலத்தில் பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

Related Posts