Ad Widget

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்திய இருவர் கைது

முகப்புத்தகத்தில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இரு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் சனிக்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை, வரணியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்கும்படி முகப்புத்தகத்தினூடாக வற்புறுத்தி வந்துள்ளார். குறித்த யுவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவ்விளைஞனின் முகப்புத்தக சுவற்றில் பதிவேற்றியிருந்த ஆபாச புகைப்படங்களை யுவதியின் பேஸ்புக் கணக்கில் இணைத்துள்ளார்.

தனது குடும்பத்தினருடன் முகப்புத்தகத்தை பார்த்த போது, தனது சுவற்றில் இணைக்கப்பட்டிருந்த ஆபாச படங்களால் அசௌகரியத்துக்கு உள்ளான அந்த யுவதி, இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்தார். யுவதியின் முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி இளைஞன் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அல்வாய், மனோகர பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், தனது மனைவியின் தங்கையின் முகத்தை, ஆபாச படங்களுடன் இணைத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை (06) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் 31 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர், தனது திருமணத்தை குழப்பும் நடவடிக்கையில் பல காலமாக ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் கூறியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts