Ad Widget

பேரினவாதத்தைத் தூண்டாதீர்கள் – மஹிந்தவுக்கு சம்பந்தன் பதிலடி

சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஈடுபடுவதை உடன் கைவிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது.

இதன்போது புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் முன்வைத்து உரையாற்றினார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்தானது எனவும், அது இப்போதைக்குத் தேவையில்லை எனவும் மஹிந்த தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதற்குப் பதிலளித்து உரையாற்றும்போதே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியிருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்த ராஜபக்ஷ அணியினரே நீங்கள் தேசப்பற்றாளர்களாக நடிக்க வேண்டாம். நீங்கள் போலியான தேசப்பற்றாளர்கள். நீங்கள் படுமோசமானவர்கள். சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டுகின்றீர்கள்.

நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுக்க பல சர்வதேச நாடுகள் உதவின. இந்தியா உள்ளிட்ட அந்த நாடுகளிடம் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவோம் எனவும், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணுவோம் எனவும் வாக்குறுதியளித்தீர்கள். இதை நீங்கள் மறந்துவிட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியம். இதனூடாக மூவின மக்களும் ஒற்றுமையுடன் – நல்லிணக்கத்துடன் – சம உரிமையுடன் – அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் வாழ முடியும்“ என தெரிவித்திருந்தார்.

Related Posts