பேரிடர் நினைவுநாளை இராணுவத்துக்குரிய தினம்போலக் கொண்டாடுவது தவறானது

பேரிடர் நினைவுநாள் படைத்தரப்புக்குரிய தினம் அல்ல. இதனை இராணுவத்துக்குரிய தினம்போலக் கொண்டாடுவது தவறானது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கரைச்சிப் பிரதேசசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (26.12.2015) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தினம் பிரகடனப்பட்டிருப்பதன் நோக்கம், எதிர்காலச் செயற்பாடுகள்பற்றி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது உரையில்,

கடற்கோள் தாக்கிய நினைவுநாளை இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. பேரிடர் நினைவுநாளை தேசிய பாதுகாப்புத் தினம் என்ற பெயரில் கடைப்பிடிப்பது பொருத்தமற்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு என்றால் உடன் நினைவுக்கு வருவது படைத்தரப்புத்தான். பேரிடர் நினைவுநாள் படைத்தரப்புக்குரிய தினம் அல்ல. ஆனால், படையினரும் தங்களுக்குரிய ஒரு தினமாகத்தான் இதனைக் கருதுகிறார்கள்.

வடக்கில் நடைபெறும் கடற்கோள் நினைவஞ்சலிகளில் படையினர் கலந்துகொள்கிறார்கள். இதில் தவறு இல்லை. ஆனால், பல இடங்களில் இராணுவம் தேசியக் கொடியேற்றி, தேசியகீதம் இசைத்து, நினைவுச்சுடரேற்றிய பின்பே நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. முல்லைத்தீவில் நான் கலந்துகொண்ட கடற்கோள் நினைவஞ்சலியில் படையினர் இவ்வாறே நடந்துகொண்டார்கள். கொடியேற்றும் இடத்துக்கு வருமாறு எங்களை அழைத்தபோது நான் உட்பட அங்கு வந்திருந்த வடமாகாணசபை உறுப்பினர்கள் எவரும் அங்கு போகவில்லை.

பேரிடர் நினைவு நாளை, தேசிய பாதுகாப்புத்தினம் என்று பெயர்சூட்டி, இராணுவத்துக்குரிய தினம்போலக் கொண்டாடுவது தவறானது. இது ஏற்புடையதல்ல. ஒரு தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம், அத்தினத்தின் கருப்பொருள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் செயற்படத் தூண்டுவது தான். ஆனால், தேசிய பாதுகாப்புத் தினம் என்ற பெயரில் பேரிடர் நினைவுநாளைக் கடைப்பிடிக்கும்போது அதன் உண்மையான நோக்கையும் இலக்கையும் மக்களிடம் எடுத்துச்சென்று சேர்க்க முடியாது. இது தொடர்பாக, சில வருடங்களுக்கு முன்பே உரிய அரச அதிகாரிகளிடம் நான் எடுத்துக்கூறியும் இந்தப் பெயர் மயக்கத்தை, பொருத்தமற்ற சொற்பிரயோகத்தை அவர்களால் இன்னமும் சரிசெய்ய முடியாமலே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Disaster Mitigation Day Kilinochchi (1)

Disaster Mitigation Day Kilinochchi (2)

Disaster Mitigation Day Kilinochchi (3)

Disaster Mitigation Day Kilinochchi (4)

Disaster Mitigation Day Kilinochchi (5)

Disaster Mitigation Day Kilinochchi (6)

Disaster Mitigation Day Kilinochchi (7)

Disaster Mitigation Day Kilinochchi (8)

Disaster Mitigation Day Kilinochchi (9)

Disaster Mitigation Day Kilinochchi (10)

Disaster Mitigation Day Kilinochchi (11)

Disaster Mitigation Day Kilinochchi (12)

Disaster Mitigation Day Kilinochchi (13)

Disaster Mitigation Day Kilinochchi (14)

Disaster Mitigation Day Kilinochchi (15)

Related Posts