Ad Widget

பேராசிரியர் பாலகிருஷ்ணனுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரங்கல்

Prof.-Vasanthy“பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தில் பெருவிருப்புடன் பணியாற்றிய பேராசிரியர் நாகலிங்கம் பாலகிருஷ்ணனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது” என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

பொருளியல்துறை பேராசிரியர் நாகலிங்கம் பாலகிருஷ்ணனின் மறைவையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல்துறை மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:

பேராசிரியர் பாலகிருஷ்ணன் சிறந்த ஆங்கிலப் புலமை மிக்கவர். பேராசிரியராவதற்கு பட்டங்கள் முக்கியமல்ல. அறிவு போதும் என்பதற்கு பேராசிரியர் சிறந்த எடுத்துக்காட்டு.

கல்வித்துறைக்குச் சிறந்த சேவையாற்றிய அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரு தடவைகள் பீடாதிபதியாகவும் வவுனியா வளாகத்தின் முதல்வராகவும் பதவி வகித்தவர்.

பொருளியல் துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்த பேராசிரியரின் இழப்புக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் என்றார்.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி வி.பி.சிவநாதன் உரையாற்றுகையில்,

மாணவர்களுக்கு “றோல்’ மொடலாக விளங்கிய பேராசிரியர் பாலகிருஷ்ணனின் இழப்பு கல்வித்துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று.

புலோலி மண்ணில் தன் ஆரம்பக் கல்வியைக் கற்று பேராதனை பல்கலைக்கழகம் சென்ற பேராசிரியர் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கும் தனது சேவையை வழங்கியிருந்தார்.

அவரைக் கௌரவிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனது உறுப்பினராக அவரைச் சேர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. என்றார்.

பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பீடாதிபதிகள், துறைசார்ந்தோர் உட்படப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது இரங்கலை வெளிப்படுத்தினர்.

Related Posts