Ad Widget

பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நோர்வே அரசிடம் கையளித்து நோர்வே அரசின் தார்மீக கடமை வலியுருத்தப்பட்டது

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது உத்தியோகபூர்வமாக நோர்வே அரசிடம் கையளிக்கப்பட்டது.

பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் மாலை 02.00 மணியளவில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஷொபியொன் கோஸ்டாட்செசர் (Thorbjørn Gaustadsæther) இடம் நேரடியாகக் கையளித்தனர்.

இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் நோர்வே தூதுவர் அடங்கிய குழுவிற்குமான ஒரு மிக முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன் போது பேரவை உறுப்பினர்கள் நோர்வேயின் சமாதான காலத்தின் போது தமிழ் மக்கள் எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்தனர் என்பதையும், முதற்தடவையாக ஆறு வருட கால போர் நிறுத்தம் மிகவும் எதிர்பார்ப்புடன் நோர்வே நாட்டின் மீதான அதீத நம்பிக்கையின்பால் அதுவும் ஒரு சமஸ்டி தீர்வை நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்தில் சர்வதேசத்தால் இரு தரப்பினர்க்கும் வலியுருத்தப்பட்டு வந்த வேளையில், தமிழ் மக்கள் எதையோ நோர்வேயிடம் எதிர்பார்த்திருக்க, இறுதியில் தமிழ் இனத்துக்கே மிகவும் வேதனையான முடிவே சர்வதேசமும் நோர்வேயும் பார்த்திருக்க அரங்கேறியதானது, தமிழ் மக்கள் மனதை மிகவும் புண்படுத்தியதை மிகவும் தெளிவாக எடுத்துக்கூறியது மட்டுமின்றி நோர்வே நாட்டிற்கு தமிழ் மக்களுக்கான ஒரு கொளரவமான இறுதித்தீர்வை பெற்றுத்தரவும், இறுதி யுத்தத்தில் அரங்கேறிய மனித படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை வலியுருத்தவுமான மிகவும் பெரிய தார்மீகப் பொறுப்பு உள்ளதையும் ஆணித்தரமாக வலியுருத்தினர்.

மேலும், தமிழ் மக்கள் பேரவையினர் மிகவிரைவில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச விசாரணையை வேண்டி வடக்கு, கிழக்கு தழுவிய குரல் எழுப்புதலுக்கு, இம்முறை இலங்கையில் ஆயுதப்போராட்டம் அற்ற நிலையில், நோர்வே அரசை தமிழ் மக்கள் பக்கம் சார்ந்து நின்று சர்வதேச விசாரணைக்கான தமிழ் மக்களின் குரலை பலப்படுத்தும்படியும் பேர‌வை உறுப்பினர்கள் நோர்வே அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இவ்வேளையில் நோர்வே துணைத்தூதுவர் உள்ளக விசாரணையில் எவ்வாறு நடு நிலையான சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவது முக்கியமென்பதில் நோர்வே அரசு மிகவும் கரிசனையாக இருப்பதாகவும் அது ஒரு மிகவும் சவாலாக இருப்பதாகவும் கூறிய வேளையில், பேரவை உறுப்பினர்கள், மீண்டும் தெளிவாக தமிழ் மக்கள் பேரவை வரலாற்று அனுபவத்தாலும், எமது மக்களிற்கு இன்றைய நவீன உலகிலேயே அனைவரும் பார்த்திருக்க நடந்த மிகவும் கொடூர அழிவுகளுக்கு ஒரு சர்வதேச விசாரணையே நிச்சயம் தேவை என தமிழ் மக்கள் ஒரு குரலாக வேண்டி நிற்கின்றனர் என்பதை மீண்டும் ஒங்கி ஒலிக்கவிருக்கின்றனர் என்ற பேரவையின் தீர்க்கமான தீர்மானத்தை தெளிவுபடுத்திய சமயம், தூதுவர், தமிழ் மக்களின் இழப்புக்கான நீதி தேடலில் நோர்வேயின் பங்கு இருக்குமென தெரிவித்தார்.

Related Posts