Ad Widget

பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு!! ; பிள்ளைகள் எச்சரிக்கை!!

கோப்பாபுலவு பிலக்குடியிருப்பிலுள்ள காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது, பெற்றோர்களுடன் இணைந்து தாமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கா விமானப் படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் குடியிருப்பு காணிகளையும் விவசாய நிலங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் இரவு பகலாக பிலவுக்குடியிருப்பு பகுதியிலுள்ள விமானப்படை முகாமிற்கு முன்னால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் இன்றும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் தாம் பாடசாலைக்கு செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி உறுதி வழங்கிய போதிலும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, நாளைய தினத்திற்குள் தமதுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின், தமது போராட்ட வடிவம் மாற்றமடையும் எனவும், தீக்குளிப்பது உயிரை மாய்த்து தமது சொந்த காணிகளை மீட்கப் போராடப் போவதாகவும் அம்மக்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட ஐம்பது மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர் நேரில் சென்று தமது ஆதரவினை வெளியிட்டுளளனர்.

இந்த நிலையில் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில காணிகளை விடுவிக்க தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கோரும் காணிகள் தொடர்பில் ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் காணிப் பிரச்சினையையும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சினையும் அவசரமாக தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பொதுமக்களின் 500 ஏக்கர் காணிகளை படையினர் கையகப்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்ற போதும், படையினரும் அதிகாரிகளும் வேறு புள்ளிவிபரங்களை தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் சுதந்திரமான ஆணைக்குழுவொன்றை அமைத்து தீர விசாரித்து நியாயமான தீர்வை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

அத்துடன் 2012 ஆம் ஆண்டில் வனபரிபாலன திணைக்களம் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மக்களின் காணிகளை சுவீகரித்ததாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே 2012 ஆம் ஆண்டு வனபரிபாலனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் ஒரு நடுநிலையான விசாரணையை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியூதின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி குறித்த விடயங்களை தனக்கு எழுத்து மூலம் தருமாறும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts