Ad Widget

பெற்றோரின் அரவணைப்பு இல்லாத இளைஞர்களே குற்றம் செய்கின்றனர் : பொலிஸ்

பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்வது பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கள் உரியவற்றை செய்யாமல் அரவணைப்பும் கொடுக்காமல் விடுவதால் தான் பிள்ளைகள் சமூகத்தில் குற்றச்செயல்களைச் செய்கின்றனர் என காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி.ஜஃவ்பர் தெரிவித்தார்.

பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 23 இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்கள் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவிக்கப்படும் போது, பெற்றோர்கள் மத்தியில் கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது எப்போது பயம் ஏற்படாமல் விடுவின்றதோ அப்போதே ஏதாவது ஒரு வழியில் பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்கின்றார்கள் என்று அர்த்தப்படுகின்றது. உலக புகழ்பெற்ற பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்சனின் வாழ்க்கையில் பெற்றோரின் கவனிப்பு இன்மையே அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகக் காரணமாகியிருந்தது.

பெற்றோர்கள் பிள்ளைகளிடத்து மனம் விட்டுப் பேசுங்கள். உங்களுக்கு எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் இரவில் 1 மணித்தியாலயம் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் பெற்றோருக்குத் தெரியவரும் பெற்றோர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்ய தவறும் பட்சத்தில் பொலிஸார் அவர்களின் கடமைகளை சரியாக மேற்கொள்வார்கள்.

பிள்ளைகளிடத்து மார்க்க கல்வி, வாழ்க்கை கல்வி என்பவற்றை போதியுங்கள். அதுவே அவர்களை வாழ்க்கையின் உயர்நிலைக்கு கொண்டு செல்ல உதவும். வயதுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு திருமணங்களை செய்து வையுங்கள். திருமண வாழ்க்கையில் ஈடுபடாத இளைஞர்களே பாலியல் துஸ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை போன்ற தவறான வழிகளுக்கு செல்கின்றார்கள்.

பிள்ளைகள் வயதுக்கு வந்தால் சுயமாக முடிவெடுப்பார்கள் என்று நினைப்பது தவறு. பெற்றோர்களின் ஆசீர்வாதங்களின்றி சுயமாக முடிவெடுத்து வாழ்பவர்கள் கடைசியில் பொலிஸ் நிலையங்களுக்கு வந்து நிற்கின்றார்கள். பிள்ளைகள் எங்கு செல்கின்றார்கள், யாருடன் பழகுகின்றார்கள், என்பது தொடர்பில் அவதானமாக இருங்கள். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல யுவதிகளுக்கும் பொருந்தும்.

இளைஞர்களே நீங்கள் வீதியால் செல்லும் பெண் பிள்ளைக்கு கேலி செய்யும் போதும், உங்களுக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள் என்று நினையுங்கள். நீங்கள் செய்யும் வினைகள் உங்களை தாக்கும் நிலைமை ஏற்படலாம். பெண்களை மதிக்கப் பழகுங்கள். அவர்களிடத்து அன்பாய் இருங்கள் என்றார்.

Related Posts