Ad Widget

பெயர் மாற்றம் பெற்றது மனோ கணேசனின் அமைச்சு!

அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சு “தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்டு வெளியான இலக்கம் 1945/40 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் பெயர் அதிகாரபூர்வமாக, “தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” என மாற்றப்பட்டுள்ளது.

இந்த பெயர் மாற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அரசாணையின்படி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோன் அறிவித்துள்ளார். இந்த பெயர் மாற்றம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது-

இந்த பெயர் மாற்றம் தொடர்பில், நான் விடுத்த கோரிக்கையின்படியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாற்றத்தை செய்துள்ளார். இதன்மூலம் எனது பொறுப்பிலுள்ள அமைச்சு அதிகாரங்கள் பற்றிய விளக்கம் இன்னமும் பரவலாக தெளிவு பெறும் என நான் நம்புகிறேன். ஒருபுறம் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மும்மொழிக்கொள்கையின் அமுலாக்கம் மறுபுறம் நாட்டில் இனங்களுக்கு இடையில் சகவாழ்வு ஆகிய இரண்டு பிரதான பொறுப்புகளும் என்னிடம் உள்ளன என்பது இதன்மூலம் தற்போது தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது.

அரச நிர்வாகத்தில் மும்மொழி கொள்கையையும், இனங்களுக்கு மத்தியில் சகவாழ்வு கொள்கையையும் முறையாக அமுல் செய்வதற்காக, எனது தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, இதனுடன் தொடர்புற்றுள்ள சட்டம்-ஒழுங்கு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, அரச பொது நிர்வாக அமைச்சு, கல்வி அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகளுடன் ஒன்றிணைந்து செயற்படும். அதேவேளை எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்துடன், இன்னமும் சில பொறுப்புகள் மேலதிகமாக எனக்கு வழங்கப்படும் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன். – என்றார்.

Related Posts