Ad Widget

பெண் கொலை தொடர்பில் கைதான ஐவருக்கு பிணை

judgement_court_pinaiசுதுமலை வடக்கில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு தங்கநகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில், 05 பேரும் தலா 50,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (15) ஆஜர்படுத்தியபோதே இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 05 பேரை சனிக்கிழமை (14) பகல் கைதுசெய்திருந்தனர். மேலும் ஒருவரை அன்றையதினம் (14) இரவு கைதுசெய்திருந்தனர்.

சனிக்கிழமை (14) பகல் கைதுசெய்யப்பட்ட 05 பேரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலும் இருவரை ஞாயிற்றுக்கிழமை (15) கைதுசெய்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட இம்மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

குமாரலிங்கம் பத்மாவதி (வயது 56) என்ற இப்பெண் கொழும்பில் வசித்துவந்த நிலையில், சுதுமலை அம்மன் கோவில் திருவிழாவுக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்து, சுதுமலை வடக்கிலுள்ள தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணொருவருடன் தங்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (13) இரவு கோவில் திருவிழா முடிந்துவந்து வீட்டில் இவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். இதன்போது, சனிக்கிழமை (14) அதிகாலை வீட்டுக் கூரையை பிரித்து உள்நுழைந்தவர்கள், இவர்கள் இருவரின் கை, கால்களை கட்டி விட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் வீட்டிலிருந்த நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதன்போது, குமாரலிங்கம் பத்மாவதி (வயது 56) என்பவரின் வாயை துணியால் கட்டியமையால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்திருந்தார்.

Related Posts