Ad Widget

பெண் கொலையின் பின் புதைக்கப்பட்டு இருக்கலாம் ? பண்ணை அகழ்வில் மேலும் சில உடற்கூறுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் வெளிப்பட்ட நிலையில்,நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் மேலும் சில உடற்கூறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் அந்த இடத்தில் பற்பசை, பல் துலக்கும் தூரிகை, சீப்பு, பவுடர் பேணி, 3 மேற்சட்டைகள், பாவடை ஒன்று உள்ளிட்டவை துணியிலான கைப்பையில் காணப்பட்டுள்ளன.

அவற்றை வைத்து ஒப்பிடும்போது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும் நிபுணத்துவ ஆய்வு ஊடாகவே மனித எச்சங்கள் எந்தக் காலப்பகுதிக்குரியவை உறுதிப்படுத்தப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலமை கண்டறிப்பட முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணர் மயூரதன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் கோவில் வீதியில் தனியார் காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை காலை மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்தை தோண்டும் போது தென்பட்டன.

அவைதொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் பி அறிக்கையைத் தாக்கல் செய்து அந்த இடத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி கோரினர்.

அதனடிப்படையில் அன்றைய தினம் மாலை சம்பவ இடத்துக்குச் சென்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை சான்றுப் பொருள்களாகக் கொண்டு மேலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து மனித எச்சங்கள் உள்ளனவா என்று ஆராய்வதற்கு பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டது.

நிபுணத்துவ சட்ட மருத்துவ அதிகாரி உ.மயூரதன், கடமை விடுப்பில் உள்ளதால், அவரது முன்னிலையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க உத்தரவிட்ட பதில் நீதிவான், பணிகளை நேற்று செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் அகழ்வுப் பணிகள் நேற்றும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts