Ad Widget

பூர்வீக காணிகளை இராணுவ தேவைகளுக்கு விற்க வேண்டாம்!

ஆசைப்பேச்சுக்களுக்கு மயங்கியோ அல்லது பயமுறுத்தல்களுக்குப் பயந்தோ தமது பூர்வீக காணிகளை இராணுவ தேவைகளுக்கு விற்க வேண்டாம் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

போர் முடிவுற்று பல ஆண்டுகளான பின்பும் நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் இந்நாட்களில் கூட எமது மக்கள் அகதிகளாக முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக மக்களின் காணிகள் இராணுவத்தினராலும், அரசாங்கத்தினராலும் முன்னரும் அபகரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின் தமது காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் பெரிதும் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்த நிலையில் நல்லாட்சி என்ற போர்வையில் நடைபெறுகின்ற ஆட்சியில் மீண்டும் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் மெதுவாகத் தலைதூக்கியுள்ளன.

கீரிமலை, சேந்தாங்குளத்தில் அண்மையில் கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக தேவாலய காணிகளை அபகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பினால் முறியடிக்கப்பட்டது. அதேபோல நேற்று சுழிபுரம் திருவடிநிலை கடற்கரைபகுதியில் மக்களின் காணியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு, அக்காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் நில அளவையில் ஈடுபட முயன்றபோது, அப்பகுதி கடற்றொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் படையினரது ஆசைப்பேச்சுக்களுக்கு மயங்கியோ அல்லது பயமுறுத்தல்களுக்குப் பயந்தோ தமது பூர்வீக காணிகளை இராணுவ முகாம்களை அமைக்க விற்க சம்மதம் தெரிவித்து வரும் விரும்பத்தகாத அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

நேற்று சுழிபுரம் திருவடிநிலை கடற்படைமுகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் ஒருசிலர் பல்வேறுபட்ட அழுத்தங்கள், சலுகைகள் மத்தியில் கடற்படைக்கு காணி வழங்க சம்மதித்துள்ளதாக அறிய முடிகின்றது. இது மிகவும் அபாயகரமான ஒன்றாகும் என்பதுடன், எம்மினத்தின் எதிர்கால இருப்பை சிதைக்கும் ஒரு காட்டிக்கொடுப்பு முயற்சியும் ஆகும்.

ஆகவே எம் உறவுகளே! படையினருக்கான முகாம்களை அமைப்பதற்காக உங்கள் காணிகளை எந்த விதத்திலும் அரசிடம் விற்க வேண்டாம் என மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்வதுடன், எமது இனத்தின் எதிர்கால இருப்பைச் சிதைக்கும் வேலைகளை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் மிகவும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றேன் என அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Posts