டக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாகுவதற்கான எந்த சூழ்நிலையும் தற்போது இல்லையென புதிய கடற்படை தளபதியான வைஸ் அட்மிரால் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

கடற்படை தளபதியாக பதவியேற்ற பின்னர், நேற்று (புதன்கிழமை) முதன்முதலாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து நாடு முழுமையான சமாதானத்தை நோக்கி நகர்ந்து செல்கின்ற நிலையில், பாதுகாப்புத் தரப்பினரின் நகர்வுகள் சமாதானத்தை நோக்கியதாகவே அமைய வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, பாதுகாப்பு படையினர் தமது உத்தியோகபூர்வ சீரூடையை அணிந்துகொண்டு குற்றமிழைக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாதென தெரிவித்த கடற்படை தளபதி, அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த தரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
ட்ராவிஸ் சின்னையா இதற்கு முன்னர் அமெரிக்க தூதரகத்தில் சிறிது காலம் பணியாற்றியிருந்த நிலையில், இவரை அமெரிக்காவின் முகவர் என்றும் சிலர் விமர்சித்திருந்தனர். இதற்கு பதிலளித்த கடற்படை தளபதி, தான் அமெரிக்காவின் முகவர் இல்லையென்றும் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு தொடர்பான நிபுணராக சிறிது காலம் பணியாற்றிய அனுபவமே உண்டு எனவும் குறிப்பிட்டார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							