Ad Widget

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாலும் போராட்டம் மீண்டும் தலைதூக்கும்!!; நாடாளுமன்றில் முழங்கினார் சம்பந்தன்

“தமிழர் தாயகப்பகுதிகளை அரசு திட்டமிட்டு முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்துவிட்டோம் என்றும் அரசு பெருமை பேசுகின்றது. ஆனால், புலிகள் அழிக்கப்பட்டாலும் அங்கு தமிழர்களின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே, தமிழர் போராட்டம் ஆத்மார்த்த ரீதியில் மீண்டும் தலைதூக்கும்.
இவ்வாறு நாடாளுமன்றில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
அவர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது

எம்மீது தவறான குற்றச்சாட்டுகளும், பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை நான் மறுக்கின்றேன். புலிகளின் கொலைப்பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், நீங்களோ (அரசு)எம்மைப் புலிகள் என்றும், எங்களைப் புலிகளின் பங்காளிகள், பிரதிநிதிகள் என்றும் கூறுகின்றீர்கள். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும்.

புலிகள் தாமாக உருவாகவில்லை. தமிழ் மக்களாலும் உருவாக்கப்படவில்லை. மாறி மாறி வந்த அரசுகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆக்கிரமிப்புகளும், அடக்குமுறைகளும்தான் புலிகள் உருவாகுவதற்குக் காரணிகளாகின என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று யார் யாரோ கூறிக்கொள்கின்றனர். புலிகளை எவரும் அழிக்கவில்லை. அவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொண்டனர். ஜனநாயகத்தையும், தார்மீகத்தையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள்.

டயஸ் போராக்கள், புலம்பெயர்வாழ் சமூகம் என்று கூச்சல் போடுகின்றீர்கள். 1956ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட பெருமெடுப்பிலான இன ஒழிப்பின்போது தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே இந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். இன்று ஒன்றுபட்ட சமூக அமைப்பாக செயற்படுகின்றனர்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கடந்த காலங்களில் பண்டார நாயக்க செல்வநாயகம், டட்லி செல்வநாயகம் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அந்த உடன்படிக்கைகளில் குடிப்பரம்பல்களில் மாற்றம் ஏற்படுத்தப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்றே அந்த உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அதன் பலனை இன்று அனுபவிக்கின்றோம். வடக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 4 ஆயிரத்து 600 ஹெக்டேயர் காணிகள் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரம் வீடுகள் இராணுவத்தினருக்காகக் கட்டப்பட்டுள்ளன.

இதற்கும் மேலாக பொதுமக்களின் 555 வீடுகளிலும், 308 தனியார் காணிகளிலும், 153 பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகங்களிலும் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள 20 படைப்பிரிவுகளில் 15 படைப்பிரிவுகள் வடக்கிலும், இரண்டு படைப்பிரிவுகள் கிழக்கிலும் நிலைகொண்டுள்ளன. போர் முடிந்து மூன்றரை வருடங்கள் கடந்த பின்னும் இந்த இராணுவ அதிகரிப்பு அவசியம் தானா?
அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டமிட்ட இராணுவக் குடியேற்றங்களில் வசிக்க இருப்பவர்கள் ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளாகவும், பின்னர் வாக்காளர்களாகவும் பதியப்படுவதன் மூலம் பாரம்பரியமாக வாழும் தமிழ் மக்களின் குடிப்பரம்பலைக் குறைக்கும் திட்டம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

நாம் இராணுவத்தினருடன் சண்டை பிடிக்க முனையவில்லை. இராணுவம் முற்றாக வெளியேற்றப்படவேண்டும் என்றும் ஒருபோதும் கூறவில்லை. எமது பிரதேசம் முற்றும் முழுதாக இராணுவமயமாக்கப்படக் கூடாது என்றுதான் சொல்கிறோம்.

வடக்கில் ஐந்து லட்சம் பொதுமக்கள் வாழ்கின்றனர். ஆனால், ஒன்றரை லட்சம் படையினர் அங்கு இருக்கின்றனர். இந்தக் கணிப்பீட்டின்படி ஒவ்வொரு மூன்று பொது மகனுக்கும் ஓர் இராணுவம் என்ற விகிதத்தில் படையினர் நிலைகொண்டுள்ளனர்.

நாம் இராணுவத்தினருக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால், இந்த இராணுவமும், அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவதையும் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வதையும்தான் கண்டிக்கின்றோம்.

இராணுவம் தமது முகாம்களில் இருந்து பாதுகாப்புக் கடமைகளைச் செய்யட்டும். எமது மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு கைத்தொழில்கள் மற்றும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு சுயமாக வாழ விரும்புகின்றனர்.

ஆனால், இராணுவத்தினர் பல ஏக்கர் வயற்காணிகளை சுற்றிவளைத்து விவசாயம் செய்கின்றனர். கால்நடைகளை வளர்க்கின்றனர். மரமுந்திரிகைச் செய்கையிலும், தென்னை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, எமது மக்கள் சொந்த இடங்களுக்குச் சென்று வாழத் தடைவிதிக்கின்றனர். வலிகாமம் மற்றும் சம்பூர் பிரதேசங்களில் மீள் குடியமர்த்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இராணுவம் மறுக்கின்றது.
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு ஆகிய இடங்களில உள்ள காணிகளை இராணுவ உடமையாக்கிக்கொண்டு அங்கு வாழ்ந்த மக்களை நடு வீதியில் விட்டுள்ளது. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் அரசு திட்டமிட்டு இராணுவ முகாம்களையும், குடியேற்றங்களையும் மேற்கொள்வதன் மூலம் குடிசனப் பரம்பலில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசு முனைகின்றது.

இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதனை எதிர்க்கின்றோம். வடக்கில் 180 பேரை இராணுவத்திலும், 2,500 பேரை சிவில் பாதுகாப்புப் படைகளிலும் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு கறுப்புநிற ரீசேர்ட்டுகளை வழங்கி 18 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாகவும் வெளியுலகுக்குக் காட்டப்படுகிறது.

ஆனால், இவர்கள் முகாம்களில் சிற்றூழியர்களாகவும், பணியாளர்களாகவுமே அமர்த்தப்பட்டுள்ளனர். சுயநோக்குடன் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவே இந்த ஆள்சேர்ப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

தென் பகுதியில் ஜே.வி.பியினர் வருடா வருடம் கார்த்திகை வீரர்கள் தினம் என்று பிரமாண்டமான விழாக்களையும், ஊர்வலங்களையும் நடத்துகின்றனர். இதனை அரசோ, இராணுவமோ கண்டு கொள்வதில்லை.

ஆனால் முருகனுக்கும் விளக்கேற்றவும், வடக்கில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் தடைவிதிக்கின்றனர். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியாக விளக்கேற்றி மௌன அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த மாணவர்கள் மீது இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று பெருமைப்படுகின்றனர்.
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டாலும் அங்கே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. அது மீண்டும் ஆத்மார்த்த ரீதியாகத் தலைதூக்கும்.

இரணைமடு பிரதேசத்தின் பின்புலத்தில் டொலர்பாம், கெண்ட்பாம் மற்றும் வெலிஓயா உள்ளடக்கிய 78 கிலோ மீற்றர் பரப்புள்ள பிரதேசம் என்பவற்றை ஒன்றிணைத்து அரசு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்திவருகின்றது. இது நாட்டில் ஒருபோதும் ஜனநாயகமான சமாதானத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்றார்.

Related Posts