விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப்பயிற்சி பெற்றார் என தாஸ் அல்லது அண்ணா என்று அழைக்கப்படும் கனகரட்னம் நிசாந்தன் என்ற இளைஞனுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் எதிரி, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவில்லை என தெரிவித்த பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில் எதிரியை நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து சட்டவிரோதமான முறையில் ஆயுதப் பயிற்சி பெற்றார் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரிடம் எதிரி தானாகவே முன்வந்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார் என எதிரிக்கு எதிராக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆயினும் அத்தகைய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தான் வழங்கவில்லை என நீதிமன்றில் எதிரி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நீதிமன்றம் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த விசாரணையின் பின்னர் எதிரியினால் சுதந்திரமாகவோ சுயேச்சையாகவோ குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படவில்லை என தெரிவித்து, பொலிஸார் எதிரிக்கு எதிராக சமர்ப்பித்திருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதனையடுத்து எதிரிக்கு எதிராக வேறு ஏதாவது சான்றுகள் உள்ளனவா, வழக்கை அரச தரப்பு தொடர்ச்சியாக நடத்த உள்ளதா என அறிவிக்குமாறு நீதிமன்றம் அரச தரப்பு சட்டத்தரணிக்கு உத்தரவிடடது.
இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக சாட்சியங்கள் இல்லையென்றும், ஆகவே வழக்கை இத்துடன் முடித்துக் கொள்வதாக அரசதரப்பு வழக்குத் தொடுநர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஏதிரிக்கு எதிரான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்ட நிலையில் எதிரிக்கு எதிராக மேலதிக சாட்சியங்கள் எதுவும் இல்லாத படியால், மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், எதிரியை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரச தரப்பில் அரச சட்டத்தரணி செல்வி சுகந்தி கந்தசாமியும், எதிரி தரப்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.