மற்றவர்களைப் போன்று நான் தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்து வாக்குப்பிச்சை வாங்கவில்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. அன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்ன விடயங்கள் இன்று இல்லை என்பதை மட்டுமே கூறுகின்றேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (09) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அங்கஜன், ‘சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள், அவர்களை ஓரங்கட்டுங்கள் என்று ஒருசிலர், மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துவருகின்றனர். நான் போட்டியிடுவது ஒரு தேசிய கட்சியில். மக்கள் அளிக்கும் வாக்குகள் சிங்கள கட்சிக்கு போகப்போவதில்லை. அது எனக்குரிய வாக்குகள்’ என்றார்.
‘வெற்றிலைச் சின்னம் என்பது அங்கஜனின் சின்னம் என்பதை மக்கள் உணரவேண்டும். மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே நான் வந்துள்ளேன். மக்களின் பிரச்சினையில் குளிர்காயவேண்டிய தேவை எனக்கில்லை.
தேசிய கட்சிகள், தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பில் எதுவும் கூறாமல் ஒற்றையாட்சி என்பதை முன்வைத்துள்ளன. இதை நான் ஆதரிக்கவில்லை. எனக்கொரு வாய்ப்பளியுங்கள். இந்த ஒற்றையாட்சி முன்மொழிவினை இல்லாது செய்ய நான் பாடுபடுவேன்.
நாம் பொருளாதார ரீதியில் வலுவடையாவிட்டால் இனப்பிரச்சினைக்கான சர்வதேச விசாரணை வருவதற்குள் எம் இனம் முழுமையாக அழிந்துவிடும். இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் உணவுப்பொதி வழங்கி வாக்கு பெறும் நிலைமை உருவாகிவிடும்’ என அவர் மேலும் கூறினார்.