Ad Widget

புலிகளை வால் பிடித்திருந்தால் கூட்டமைப்புக்கு நானே தலைவன் – வீ.ஆனந்தசங்கரி

‘தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காமையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நான் துரோகியாக்கப்பட்டேன். விடுதலைப் புலிகள்தான் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லி இருந்தால், நான்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்.இரா.சம்பந்தன் உட்கார்ந்து இருக்கும் கதிரை என்னுடையது. அதனை குறுக்கு வழியில் பறித்து அவர் இன்று இருக்கின்றார்’ என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு, ஆயுத வழியில் சென்ற நான், ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன். எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அவ்வேளை, கருணா அம்மானை வெளியே விட்டது தவறு உடனே திரும்ப அழைத்து உங்களிடையே உள்ள வேற்றுமைகளை களையுமாறு கோரி உடனே பிரபாகரனுக்கு கடிதம் எழுதினேன்.

தற்போது கருணா வசிக்கும் வீடும் எனது வீடும் அருகில் உள்ளன. அதனால், நாம் அடிக்கடி வெளியில் சென்று வரும் போது சந்திந்தித்துக் கொள்வோம் அப்போது பரஸ்பரம் நலன் விசாரித்து கொள்வோம். அதெல்லாம், முதலாம் கட்டம், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் அல்ல. அவருக்கு என்னுடன் சேர்ந்து ஜனநாயக பாதையில் செல்ல விருப்பம் இருக்கின்றது அதனை வெளிப்படுத்தி உள்ளார்.

அதனை வைத்து முதலாம் கட்ட பேச்சு, இரண்டாம் கட்ட பேச்சு மூன்றாம் கட்ட பேச்சு என கூறுவது அனைத்தும் முழுப் பொய். புதிதாக அமைப்பு ஒன்றினை தொடங்க முயற்சிக்கும் செய்தி கசிய தொடங்கியதும் அதனை இல்லாது ஒழிக்கவே இவ்வாறான திட்டமிட்ட வதந்தி பரப்பப்பட்டது.

இன்றைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படிப்படியாக செல்லாக் காசாக போய்க்கொண்டு இருக்கின்றது. நான் எழுதிய மூன்று கடிதம் தொடர்பில் வெளிப்படுத்தி இருந்தால் என்றைக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாக்காசாகியிருக்கும். யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்த வேளை, ஏப்ரல் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க அழைத்து இருந்தார்.

அப்போது, யுத்தத்தை நிறுத்துங்கள் சந்திக்க வருகின்றோம் என இவர்கள் கூறினார்கள். அன்று அவர்கள் போயிருக்க வேண்டும், அந்த நேரத்தில் ஏன் கூப்பிட்டு இருப்பார்கள் – விருந்து கொடுக்கவா? போயிருந்தால் இந்திய அரசாங்கம் ஏதேனும் வழி சொல்லி இருக்கும். இந்தியா அரசாங்கமா யுத்தத்தை நடத்தியது. யுத்தத்தை நிறுத்த, அவர்கள் அன்று போகாது விட்டது, தவறு. இன்றைக்கு இலட்சகணக்கான மக்கள் செத்து இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் பொறுப்பு என்றார்.

Related Posts