தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான ‘றோ’விற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பணித்திருந்தார் என விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரும் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளருமாக கருதப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே கே.பி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ராமச்சந்திரனும் விடுதலைப் புலிகளுக்கு பணம் உள்ளிட்ட வழிகளில் ஆதரவளித்ததாக கே.பி. கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல செயற்பாடுகளுக்கு கே.பி. உறுதுணையாக இருந்தாரென ஏற்கனவே குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளின் பெருமளவான தங்கம் கே.பி.யிடம் இருந்ததாகவும், அதனை கடந்த மஹிந்த அரசாங்கத்துடன் அவர் பங்கிட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கான வெடிபொருட்களை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு கே.பி. அனுப்பிவைத்தாரென முன்னாள் சீ.பி.ஐ. அதிகாரி ஒருவர் குற்றஞ்சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.