புலிகளின் விமான ஓடுபாதைக்கு பாதை அமைக்கவே மக்களின் காணிகள் அபகரிப்பு!

விடுதலைப்புலிகளின் ஓடுபாதையை புனரமைத்து அதற்கான பாதையொன்றை உருவாக்குவதற்காகவே தாம் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பதாக விமானப்படையினர் தன்னிடம் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 84ஆவது அமர்வு நேற்று நடைபெறுகையில், மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேற்றும் பிரேரணையை முன்மொழிந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

அண்மையில் பிலக்குடியிருப்பு மக்களையும், அவர்களுடைய காணிகளையும் பார்வையிட்டேன். இதன்போது, மக்களுடைய குடியிருப்புக்கு அப்பால் தமிழீழ விடுதலை புலிகள் பயன்படுத்திய விமான ஓடுபாதை ஒன்று காணப்பட்டதாகவும், அதனை புனரமைப்பு செய்து தாங்கள் பயன்படுத்துவதற்கு பாதை ஒன்றை அமைப்பதற்காகவே மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், மக்களுடைய காணிகளை வழங்க முடியாது எனவும் விமானப் படையினர் கூறினர்.

இந்த நிலையில் மக்களுடைய குடியிருப்பை தவிர்த்து வேறுவழியாக பாதை அமைத்தால் என்னவெனக் கேட்டபோது, குடியிருப்பு தவிர்ந்த மற்றைய பகுதிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் தங்களுடைய பகுதியாக அறிவித்திருப்பதாகவும் விமானப் படையினர் கூறினார்கள்.

எனவே, நியாயமான காரணம் இல்லாமலேயே விமானப் படையினர் கேப்பாபிலவு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை அவர்களுடைய பயன்பாட்டில் வைத்திருக்கின்றார்கள் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts