புலிகளின் நகைகள் சிக்கவில்லை

வடமராட்சி, மணற்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் மற்றும் பணத்தை மீட்டெடுக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட தோண்டும் நடவடிக்கையில் எவையும் சிக்கவில்லை. சுமார் 7 அடி ஆழத்துக்கு மண் அகழப்பட்ட போதும், கட்டடடிபாடுகள் மாத்திரமே கிடைத்தன.

மணற்காட்டுப் பகுதிக்கு, கடந்த 20 ஆம் திகதி சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவொன்று, விடுதலைப் புலிகள் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் பணத்தை தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டது.

வெளிநாட்டிலுள்ள ஒருவரின் அறிவுறுத்தலுக்கமைய தோண்டிய இந்தக் குழு, தங்களை இரகசியப் பொலிஸார் என பொதுமக்கள் மத்தியில் அறிவித்தது. இது தொடர்பில் அறிந்த பொலிஸார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த போது, தோண்டிக் கொண்டிருந்த ஐவரும் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

அவர்கள் ஐவரும் நெல்லியடிப் பொலிஸாரால் மறுநாள் கைது செய்யப்பட்டனர். முதலில் நீதிமன்ற அனுமதியுடன் 72 மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்ட ஐவரும், அதன் பின்னர் பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசாவின் உத்தரவுக்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேற்படி நபர்கள் தோண்டிய இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை நீதவான், புதன்கிழமை (25) உத்தரவிட்டார்.

அதற்கமைய, கனகேஸ்வரன் தலைமையில் பூகோள மற்றும் சுரங்க யாழ். மாவட்ட கனியவள அத்தியட்சகர், மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அத்தியட்சகர், தொல்பொருள் திணைக்கள அத்தியட்சகர், மணற்காடு கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் தோண்டும் பணியானது மேற்கொள்ளப்பட்டது.

முன்னர் அந்த இடம் தோண்டப்பட்டு, கிடங்கு ஏற்பட்டிருந்த இடத்தில் தொடர்ந்து பெய்த மழையால் கிடங்கு நீர் நிரம்பியிருந்தது.

இதனால், முதலில் 3 நீர்ப்பம்பிகள் கொண்டு நீர் இறைக்கப்பட்டு அதன் பின்னர் தோண்டும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது. தோண்டும் போது கட்டட இடிபாடுகள் மாத்திரமே வந்துள்ளன.

Related Posts