Ad Widget

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளுக்கு என்ன நடந்தது?

இலங்கையில் நடந்த போரின் போது, புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் பொதுமக்களுக்கு உரியதை, அவர்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போரின்போது, போர் வலயப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நகைகள் குறித்து, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மலையகம் மற்றும் தெற்கிலுள்ளவர்களுக்கு தங்களது காணி எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோன்று வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது நகைகள் முக்கியமானதாக இருப்பதாகக் கூறிய நலிந்த ஜயதிஸ்ஸ, புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைளின் எடை என்ன, எவ்வகையான நகைகள் மீட்கப்பட்டுள்ளன, பொது மக்களுக்குரியது அவர்களிடம் எப்போது கையளிக்கப்படும் என்று பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இராணுவத் தகவல்களுக்கமைய தங்கச் சங்கலி, காப்பு, தோடு, பென்டன், மோதிரம் போன்றவை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 150 கிலோ மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 32 கிலோ கிராம் மத்திய வங்கியிடம் 2010ஆம் ஆண்டிலிருந்து பகுதி பகுதியாக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட நகைகளில் ஒரு தொகை, உரிமையாளர்களிடம் பகுதி பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், நகைகள் மீளக் கையளிக்கப்பட்டது தொடர்பில் தெளிவற்றதன்மை இருப்பதாகவும் கூறினார்.

இதனால் அதனை ஆராயும் பொறுப்பு பாராளுமன்றத்திடம் உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இதன்போது குறிக்கிட்டு பேசிய, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தாங்கள் சந்தித்த பொதுமக்கள் சிலரிடம் புலிகளின் வங்கிகளில் நகைகளை அடகு வைத்ததற்கான ரசீது இருப்பதாக தெரிவித்ததுடன், இந்த ரசீதுகளையும் மீட்கப்பட்ட நகைகளின் ஒட்டப்பட்டுள்ள குறியீடுகளை ஒப்பிட்டு, உரிமையாளர்களிடம் நகைகளை கால தாமதமின்றி கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் பாராளுமன்றத்தில் வேண்டுகோளை முன்வைத்தார்.

இங்கு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புலிகளின் வங்கியில் நகை அடகு வைத்தமைக்கான ரசீது தன்னிடமும் இருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து சபைக்கு தெரிவிப்பதாகக் கூறினார்.

Related Posts