Ad Widget

புலிகளால் எரியூட்டப்பட்ட 80பேர் தொடர்பில் தடயவியல் ஆய்வு

போர் நிறுத்தக் காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்னம் மற்றும் இராணுவ கெப்டன் லக்கீ ஆகியோர் உள்ளடங்கலான 80பேர் தொடர்பான தடயவியல் ஆய்வு நேற்று செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டன.

mullaiththevu-1

முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான், இந்திமடு, சமளன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. தற்போது தடுப்பிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே எரியூட்டப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயரத்தின, இராணுவ அதிகாரி லக்கீ உள்ளிட்ட 30பேர், முதற்கட்டமாக இந்திமடு பகுதிக்கு அழைத்துச் சென்று அவ்விடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாகவும் தொடர்ந்து, மேலும் 50பேர் பாரவூர்திகள் மற்றும் பஸ் ஆகியவற்றில் அழைத்துச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக தடுப்பிலுள்ள போராளிகள், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பிரகாரம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எரியூட்டப்பட்ட இடங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் முதற்கட்டமாக கடந்த நவம்பர் 19ஆம் திகதி, கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் மேற்படி இடங்களைச் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, அந்த இடங்களில் தடய ஆய்வுகள் நடத்தும் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (02) முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், தடயவியல் நிபுணர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், நிலஅளவையாளர், குற்றப்பதிவு திணைக்கள அதிகாரிகள், இரசாயன பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், நச்சுத்தன்மை தொடர்பான சட்ட வைத்திய அதிகாரி, ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தடயவியல் தொடர்பான கற்கைநெறி கற்கும் மாணவர்கள் என 9 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், இந்த தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

இந்த தடயவியல் ஆய்வு மற்றும் விசாரணைகள் தொடர்;ந்து 5 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் அல்ப்பா 5, அல்ப்பா 2 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related Posts