Ad Widget

புலம்பெயர் வாழ் மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும்- டக்ளஸ்

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். கடந்த அரசிடமும் இதனை நாம் வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த அரசு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் இலகுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இரட்டைக்குடியுரிமைப் பெற்றவர்களுக்கும் இந்நாட்டு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

dak-thevananthaaa

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள டக்ளஸ் அவர்கள், யாழ்.மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்த கால கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க அவர்களது ஆட்சியின் போது நாம் அதனை நிறுத்தியிருந்தோம்.

இடப்பெயர்வுகள் மற்றும் கடந்தகால யுத்த அழிவுகள் காரணமாக எமது மக்கள் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, புலம்பெயர் வாழ் மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படும் பட்சத்தில் அம் மக்கள் வாக்களிக்கக் கூடிய வசதிகளையும் மேற்கொண்டால் இந் நிலைமாற்றமடைவதுடன், இதுவரை காலமும் இருந்துவந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மீண்டும் பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts