Ad Widget

புலம்பெயர் தமிழர்களால் புலிகள் மீளெழுச்சி பெறும் அபாயம்! எச்சரிக்கிறார் யாழ்.தளபதி

“புலம்பெயர் தமிழர்களிடம் தமிழீழம் தொடர்பான சிந்தனைக்கோட்பாடு இன்னமும் அழியாமல் இருப்பதால் அவர்கள் மூலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் மீளெழுச்சி பெறலாம் என்ற அச்சநிலை உள்ளது.”

இவ்வாறு யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

army-chef-uthayaperera

கொழும்பில் இடம்பெறும் பாதுகாப்புக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் (நேற்று செவ்வாய்க்கிழமை) அமர்வின்போது ‘தீவக நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதிலும் முன்னெடுத்துச் செல்வதிலும் ஏற்படக்கூடிய புதிய சவால்களை சந்திப்பதற்கான தரைப்படையொன்றின் வழிமுறைகள்’ என்ற தலைப்பில் மேஜர் ஜெனரல் உதய பெரேரா உரையாற்றினார்.

இதன்போது கருத்தரங்கில் பங்கேற்ற பாகிஸ்தானிய முன்னாள் படையதிகாரியொருவர், விடுதலைப்புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் எந்தளவிற்கு உள்ளதென வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேஜர் ஜெனரல் உதய பெரேரா அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“எந்தவொரு இராணுவமும் தனித்த நிலையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது. முதலில் சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஓரங்கட்டிய பின்னர் சமூகத்திடமிருந்தும் தனிமைப்படுத்திய பின்னரே விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது சாத்தியமானது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் சமூகத்தின் பங்களிப்பு இருந்தது. விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெறாத வண்ணம் எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். ஆனால், புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் சிந்தனை இன்னமும் அழியாமல் உள்ளது.

புலம்பெயர்ந்தவர்கள் இங்குள்ள பிராந்திய அரசியற்கட்சிகளை தமது தேவைக்கு ஏற்ப திரிவுபடுத்திச் செயற்படுகின்றனர். பணம் கிடைக்கின்றமையால் இங்குள்ள கட்சிகளும் புலம்பெயர்ந்தவர்களின் தாளங்களுக்கு ஏற்ப செயற்படுகின்றனர். அந்தவகையில் புலம் பெயர்ந்தவர்களாலேயே விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவதற்கானதொரு அபாயநிலை காணப்படுகின்றது” – என்றார்.

Related Posts