Ad Widget

புலம்பெயர் இலங்கையர் நாடு திரும்பவேண்டும்! பிரதமர் ரணில் அழைப்பு!!

“யுத்தம், அரசியல், மதப் பிரச்சினைகளால் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது.

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட இந்த விசேட நிகழ்வின்போது, முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமையும் வழங்கிவைக்கப்பட்டது.

இதில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1983இல் நடைபெற்ற கலவரத்தின்போது பல தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். இவர்கள் மட்டுமன்றி, அரசியல் காரணங்களுக்காக சிங்களவர்கள், மதப் பிரச்சினைகளால் முஸ்லிம் மக்கள் எனப் பலர் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாடுகளில் வசிக்கின்றனர்.

இதனால், முக்கியமான பிரஜைகளைத் தற்போது நாம் இழந்துள்ளோம் என்றே கூறவேண்டும். எனினும், தற்போது அசாதாரண நிலைமைகள் யாவும் மாற்றமடைந்துவிட்டன. நாட்டில் பூரண சுதந்திரம் பரவியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் குடிபுகுந்துள்ள எமது அனைத்துச் சொந்தங்களும் மீண்டும் நாடு திரும்பவேண்டும்.

இதன்மூலமே நாட்டை அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் முன்னேற்ற முடியும் என்பதால் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் இலங்கைக்குள் வரவேண்டும்” – என்றார்.

Related Posts