Ad Widget

புலம்பெயர்ந்தோர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்

முதலீடுகள் அரசியல் தீர்விற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டு, பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

வடமாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 ஆண்டு கால போர்ச் சூழலில் எமது முதலீடுகளும், தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த முதலீட்டாளர் சம்மேளனம் முதலீடுகளின் ஆரம்பமாக அமையும்.

சர்வதேச சமூகமும் புலம்பெயர் தமிழர்களும் இதற்கு பங்களிப்பினை வழங்க வேண்டும். விதவைகள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், இழந்து போன இழப்புக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறான முதலீடுகள் மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

பொது மக்கள் அரசியல் ஆணை கொடுத்திருக்கின்றார்கள், அந்த அரசியல் ஆணைக்கு ஏற்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.

தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்வது குறித்து தொடர்சியாக பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படும். அத்துடன், எமது வளங்களையும், சூழல்களையும் மாசுபடுத்தாமல் தொழிற்சாலைகள் மீளவும் செயற்படுத்த வேண்டும்.

மேலும், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் உள்ள சுண்ணக்கற்கள் அகழப்பட்டு வருகின்றன. சுண்ணக்கற்கள் அகழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை. எனவே, தொழிற்சாலைகள் மீள இயக்கப்படும் பொழுது சூழல் மாசுபடுதலை தடுக்கும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

சுண்ணக்கற்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து எமது தொழிற்சாலைகளை மீளவும் இயக்கலாம். அதனால் எமது சூழல்கள் மாசுபடுவதை தடுக்க முடியும். புலம்பெயர் மக்கள், வெளிநாட்டவர்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடுகளை செய்ய முன்வந்தால், பொருளாதார நெருக்கடியினை குறைத்துக்கொள்ள முடியுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Posts