புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைப்பு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த மூவர் நேற்றயதினம் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

ltte

நேற்றய தினம் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த இருவரும் சிங்கள இளைஞர் ஒருவரும் அடங்கியுள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் சரணடைந்தும் கைதுசெய்யப்பட்டும், இருந்த நிலையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுவருகின்றனர்.

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இவ்வாறு சமூகமயப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த நிலையத்தில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவுசெய்த மேலும் மூவர் நேற்றய தினம் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த சிங்கராசா எட்மன், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் சிறீதரன் மற்றும் கொழும்பு மோதர பகுதியைச் சேர்ந்த அஜித் குமார ஆகிய மூவரே புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கள இளைஞர் ஒருவரும் முன்னாள் விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த சிங்கள இளைஞர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், ஆறுமாதகால புனர்வாழ்வின் பின்னர் அவர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது புனர்வாழ்வு நிலையத்தில் பல கைத்தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த 10 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், பூந்தோட்டம் புனர்வாழ் நிலையப் பணிப்பாளர் லெப்.கேணல். எம். ஏ.ஆர். கமில்டோன், நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் குணசேகர, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யும் நிலைய பொறுப்பதிகாரி, சிறைச்சாலை அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், முன்னாள் போராளிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts