Ad Widget

புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி உதயமானது

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் என்ற பெயர் அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் தலைவர் அன்பரசன் கூறினார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் அன்பரசன் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதி கொழும்புக்கு சென்று தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து இந்தக் கட்சியை பதிவு செய்ததாகவும், புனர்வாழ்வு பெற்ற 12,000 இற்கும் அதிகமான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சார்பாக ஜனநாயக ரீதியான அரசியல் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.

வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் வரையறுக்காமல் மலையகம் உட்பட தேசிய ரீதியாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க இருப்பதாக அவர் கூறினார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் தற்போதும் வாழ்வாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களின் சார்பாக குரல் கொடுப்பதற்காகவே இந்தக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அல்லது அவர்களை வீழ்த்தும் நோக்கம் எதுவும் தமக்கில்லை என்றும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் அன்பரசன் மேலும் தெரிவித்தார்.

Related Posts