Ad Widget

புனர்வாழ்வு குறித்த கைதிகளின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிக்கும்

தம்மை புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்து பின்னர் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை, இலங்கை அரசு சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் குறித்து கலந்தாலோசிக்க கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட சுமந்திரன், இந்தக் கூட்டத்தில் அரசு இரண்டு முடிவுகளை எடுத்து சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மூலம் கைதிகளுக்குத் தெரியப்படுத்தியதாகத் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது, தம்மை புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்த்து, பின்னர் விடுதலை செய்யுமாறு 99 அரசியல் கைதிகள் விடுத்த வேண்டுகோளை சாதகமாகப் பரிசீலிப்பது, மற்றையது அவர்களில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகளை சந்திக்கும் 85 பேர்களது கோரிக்கையை முதலில் எடுத்து அவர்களை பகுதி பகுதியாக புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்ப்பது என்பதே அந்த முடிவு எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளதாக பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த முடிவுகளை அமைச்சர் சுவாமிநாதன் சிறையில் கைதிகளை சந்தித்துத் தெரியப்படுத்தியபோது, கைதிகள் இது குறித்த தமது நிலைப்பாட்டை தமக்குள் கலந்தாலோசித்து பின்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர் மூலம் தெரிவிப்பதாகக் கூறினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவரை அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர், ஐந்தாண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளதாகவும், இது குறித்து அரசு பரிசீலித்து இது பற்றி சட்டமா அதிபருக்கு பரிந்துரை செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது போல் ஐந்தாண்டுகள் சிறையில் கழித்த கைதிகள் 59 பேர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts