மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் பல அண்மைய காலமாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், படுவான்கரை மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) துப்பரவு செய்யப்பட்டது.
பற்றைக் காடாய் கிடந்த குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்த மக்கள், உயிர்நீத்தவர்களின் நினைவாக பொதுச்சுடரேற்றி மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
இச் சிரமதானப் பணியில் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களும், பிரதேச மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பின் படுவான்கரைப்பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அப்பிரதேசத்தை பின்னர் இராணுவத்தினர் கைப்பற்றினர். இதனால் அங்கிருந்த மாவீரர் துயிலும் இல்லம் தகர்க்கப்பட்டிருந்ததுடன், அதை அண்டிய பகுதியில் இராணுவத்தின் முகாமும் அமைக்கப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். சிறிது காலத்தின் பின் இராணுவ முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டது.
அதன் பின்னர் பற்றைக் காடாக கிடந்த இந்த மாவீரர் துயிலும் இல்லத்தின் சிறு பகுதி, கடந்த வருடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட சிலரால் துப்பரவு செய்யப்பட்டதோடு, சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.