Ad Widget

புத்தாண்டில் எடுக்கும் உறுதிமொழியை ஏனைய 364 நாள்களிலும் அரச ஊழியர்கள் பின்பற்றுவதில்லை!!

“அரச உத்தியோகத்தர்கள் இன்று (01-01-2019) எடுத்துக்கொண்ட உறுதிமொழி வழமையாக இடம்பெறும் ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வாக இருந்து விடக்கூடாதென்பதே எனது எதிர்பார்ப்பாகும். பல வருடங்களாக ஜனவரி 01ஆம் திகதி நாம் இத்தகையதொரு உறுதிமொழியை எடுத்துக்கொள்கின்ற மரபினை கொண்டிருக்கின்றோம். என்றாலும் எஞ்சிய 364 நாள்களும் பெரும்பாலும் நாம் இந்த உறுதிமொழியிலிருந்து விலகியிருப்பதுதான் அரச சேவையை மக்கள் மதிக்காதிருப்பதற்கு காரணமாகும்”

இவ்வாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்கள் புத்தாண்டில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த புத்தாண்டில் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாம் செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஜனாதிபதி நேற்றைய தினம் மிக முக்கியமானதொரு செய்தியை வழங்கியிருக்கிறார். அரச ஊழியர்கள் என்ற வகையில் நாம் மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் தேசிய வருமானத்திலேயே தங்கியிருக்கிறோம். எனவே நாம் இந்த நாட்டு மக்களுக்குத்தான் அரச ஊழியர்களாக இருக்கிறோம்.

இரண்டாவதாக ஜனாதிபதி நேற்றைய தினம் வழங்கிய செய்தி இன்றைய தினம் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டின் புத்தாண்டுச் செய்தியாக அதனை ஆக்கிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அதுதான் இந்த அரச சேவையை நேர்மையான முறையில் அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சுமையில்லாத வகையில் செயற்படுத்துவதாகும்.

ஜனாதிபதி வார்த்தைகளில் கூறுவதானால் அனைத்து அரசுகளின் மீதும் மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்துவதற்கும் இந்த நிறுவனங்களுக்கு மக்கள் மதிப்பளிக்காதிருப்பதற்கும் காரணம் ஜனாதிபதியின் செயலாளர் முதல் அலுவலக ஊழியர் வரையுள்ள முழு அரச சேவையிலும் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாதிருப்பதேயாகும்.

எனவே எந்தவொரு சமயத்தை பின்பற்றினாலும் நாம் செய்ய வேண்டியது அந்த வெறுப்பை இல்லாது செய்யும் வகையில் எமது பொறுப்புக்களையும் எமது பணிகளையும் நிறைவேற்ற வேண்டும். எனவேதான் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நான் அனைத்து ஊழியர்களிடமும் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எமது நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களுக்கேற்ப 15 இலட்சம் பேர் கொண்ட அரச ஊழியர்களுக்காக சுமார் ஒரு டிரில்லியன் ரூபா வரையில் பெருமளவு நிதி செலவிடப்படுகின்றது. என்றாலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப அவர் அதனை ஒரு சுமையாக கருதவில்லை. இந்த அரச சேவை தேவையான ஒன்றாகும். அரச சேவைக்கு செலவு செய்வதில் பிரச்சினையில்லை. எனினும் அதன் மூலம் கிடைக்கும் பெறுபேறுகள் அதனைப் பார்க்கிலும் ஐந்து, ஆறு மடங்குகளாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாகும்.

எனவேதான் அவர் மக்கள் மைய நிர்வாகத்திற்கு, மக்கள் மைய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு, மக்களுக்கு சமத்துவத்தைக் கொண்ட ஜனநாயகபூர்வமான நிறுவனமொன்றை உருவாக்குவதற்கான முறைமையொன்றுக்கு நாம் விரைவாக வர வேண்டும் என்றே அவர் கூறுகின்றார். எனவே அரச சேவையை நெறிப்படுத்தும் தலைமை நிறுவனம் என்ற வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்த முன்மாதிரியை, இந்த அர்ப்பணிப்பை, இந்த செய்தியை நாட்டுக்கு எடுத்துச் செல்வது முக்கியமானதாகும்.

நாம் வெளியிடுகின்ற சுற்றறிக்கைகளின் செய்திகள் எமக்கு கீழிருக்கும் எம்முடன் கடமையாற்றும் அனைவருக்கும் கிடைப்பதில்லை என ஜனாதிபதி நேற்றைய தினம் குறிப்பிட்டார். ஜனாதிபதி அவ்வாறு கூறியதிலிருந்து எவ்வளவுதான் சுற்றறிக்களை அனுப்பினாலும் சில போது அலுவலகத்திலுள்ள அனைவரையும் அந்த செய்தி சென்றடைவதில்லை என நான் விளங்கிக்கொண்டேன்.

உதாரணமாக செலவுகளைக் குறைத்தல், சிக்கனத்துடன் செயற்படுதல். மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் எமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல் என்பன அதில் முக்கியமானதாகும். இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை என்பவற்றுடன் ஜனநாயகபூர்வமான, போரை நிறைவு செய்து அமைதியான சூழலொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த நாட்டில் அதனை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு அந்தச் செய்தி, பதவி பேதங்களின்றி அனைவரையும் சென்றடைய வேண்டும்.

எனவேதான் செயலாளர்களுக்கு மத்தியில், இராஜாங்க செயலாளர்களிடமிருந்து, திணைக்கள தலைவர்களுக்கிடையில், துறைத் தலைவர்களுக்கிடையில் தம்முடன் கடமையாற்றுகின்றவர்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக இந்த செய்தியை கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இறுதியாக இந்த பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கடந்த 40 நாள்களாக இந்த அலுவலகத்தின் அனைத்து அதிகாரிகளும் செயலாற்றிய விதமும் அவர்களது தொழில் நிபுணத்துவமும் அதேபோன்று இரவு, பகல் பாராது பெரும் செயற்பணியை நிறைவேற்றியமையும் அவற்றை நாட்டிற்கு தெரிவிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையும் தொடர்பில் முதலில் இந்த புத்தாண்டு தினத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று நாட்டிற்கு கிடைத்துள்ள தலைமைத்துவம் மிக சிறப்பானதாகும். ஜனாதிபதியும் ஒரு அரச ஊழியர் ஆவார். அவர் அதனை மிகுந்த பெருமிதத்துடன் கூறுபவர். ஆகையினால் சுமார் 15 இலட்சம் வரையான அரச ஊழியர்களின் குரலாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை மாத்திரம் போதுமானதல்ல. அதனை இந்த நாட்டின் சுபீட்சத்தின் நோக்காக மாற்றுவதற்கான ஆற்றல் எமக்கு கிடைக்குமானால் அனைத்து அரச சேவையாளர்களும் அவருக்கு கிடைத்த அந்த வரப்பிரசாதத்தின் பெறுபேறுகளை அனுபவிக்க முடியும்.

கடந்த நாற்பது நாள்களுக்குள் அவர் நிறைவேற்றியுள்ள கடமைகளும் அதற்காக அவர் எம்மை வழிநடத்திய விதமும் மிகுந்த பாராட்டுக்குரியதாகும். நான் அறிந்தவகையில் கடந்த நாற்பது வருடங்களின் பின்னர் இந்த நாட்டில் அமைக்கப்பட்ட மிகச் சிறிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு அவர் பக்கபலமாக இருந்த்தோடு, அதற்கான தலைமைத்துவத்தினையும் வழங்கினார். மேலும் அமைச்சுக்களை வகைப்படுத்தும்போது நடைமுறைச் சாத்தியமான வகையில் விஞ்ஞான அடிப்படையில் அமைச்சுக்களின் விடயப் பரப்புகளை அவர் தயாரித்த விதத்தினை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவர் எந்தளவு வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் சிறிய அமைச்சரவையை அமைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

இவற்றை மக்கள் அறியவில்லை. இவை போதியளவில் தெரியப்படுத்தப்படவும் இல்லை. ஆயினும் இத்தகைய சிறியதொரு அரசாங்கம் நாற்பது வருடங்களுக்கு பின்னால் உருவாகியுள்ளதென்பதும் அதற்கான தலைமைத்துவம் தற்போது கிடைத்துள்ளது என்பதும் மறுக்க முடியாததாகும்.

மேலும் ஒரு நாட்டில் அரச சேவையாளர்கள் பொதுமக்களுக்கு சுமையாக அமைந்துவிடக்கூடாது. அத்தோடு அரச சேவையின் சட்டதிட்டங்களும் சுற்றறிக்கைகளும் இயன்றளவு இலகுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அது பண செலவின்றி மேற்கொள்ளக்கூடிய பணியாகும். எவ்வித ஆலோசனைகளும் தேவையில்லை. மிகச் சரளமாக பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் அரச சேவை மாற்றியமைக்கப்படல் வேண்டுமென்பதே அவரது செய்தியாகும்.

நாட்டில் வரி முறைமை, வங்கிகள் மற்றும் நிதி, நிறுவன முறைமைகள், அரச திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இதனைவிட சரளமாக, இலகுவான நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென ஜனாதிபதி நம்புகின்றார். அவ்வாறு செயற்பட எம்மால் முடியுமெனவும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

தனியார் மயப்படுத்துதலை கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளாத அவர், அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் அதேவேளை, மாற்று வழிகளை முன்வைக்க முடியுமான சந்தர்ப்பங்களிலேயே தனியார்மயப்படுத்தப்படல் வேண்டுமென்பதை நாட்டிற்கு வெளிப்படுத்தியுள்ள ஒரு தலைவராவார்.

இதனாலேயே நாட்டின் அரச நிறுவனங்களுக்கான பணிப்பாளர்களினதும் தலைவர்களினதும் நியமனம் குறித்தவொரு முறைமைக்கமைய பொருத்தமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம்பெற வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். இதனூடாகவே இவ்வனைத்து நிறுவனங்களும் மக்களுக்கு நலன்களை வழங்கக்கூடிய பயன்மிக்க நிறுவனங்களாக மாற்றப்படும்.

ஆகையினால் இச் செய்தியினை இந்த 2020ஆம் ஆண்டிற்குள் எதிர்வரும் 100 நாள்களுக்குள் எம்மால் நிறைவேற்ற முடியுமாயின் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட முடியுமாயின் எமது நாட்டு மக்கள் அரச சேவையை மீண்டும் கீர்த்திமிக்க சேவையாக கௌரவமாக மதித்து செயலாற்றுவார்கள். அதற்கான பிரார்த்தனையுடன் பிறந்துள்ள இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சிகரமான வருடமாகவும் சுபீட்சத்தின் நோக்கினை யதார்த்தமாக்கிக் கொள்ளக்கூடிய வருடமாகவும் அமைய வேண்டுமென பிரார்த்தித்து விடைபெறுகின்றேன் – என்றார்.

Related Posts