Ad Widget

புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இந்தாண்டு நிறைவுக்குள் மீள்குடியேற வேண்டும்

மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று புத்தளம் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இந்தாண்டு நிறைவுக்குள் தமது மீள்குடியேற்றத்தை தமது முன்னைய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த மக்களுடைய அனைத்து செயற்பாடுகளையும் வடமேல் மாகாணத்துடன் இணைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ஆயுப் அஸ்மின்,

கடந்த காலத்தில் பலாத்காரமாக மன்னார் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், போதிய மீள்குடியேற்ற வசதிகள் இன்மையால் வெளிமாவட்டங்களில் இன்னமும் தங்கியுள்ளார்கள்.

வடமாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கீழுள்ள பாடசாலைகள், மருத்துவ நிலையங்கள் தற்போது வடமேல் மாகாண சபை எல்லைக்குள் இயங்குகின்றன.

இவற்றை மனிதாபிமான நோக்கில் இன்னும் சிலகாலம் குறித்த பிரதேசங்களில் இயங்க அனுமதிக்க வேண்டும் என பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார்.

இந்தப் பிரேரணை தொடர்பில் வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் கருத்துக்கூறுகையில்,

யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ளது. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்காக காணிக் கச்சேரிகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான காணிகள் வடக்கில் வழங்கப்பட்டுள்ளன.

இங்கு அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக செயற்படவும் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் இடமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களை பொறுத்தவரையில் அவர்கள் இடம்பெயர்ந்த போதிலும் இராணுவத்தினர் அவர்களுடைய காணிகளை வீடுகளை பிடித்து வைத்துள்ளார்கள். மக்களை உரிய முறையில் மீள்குடியேற அனுமதிக்கவில்லை. இதுவரையில் தமிழ் மக்களுக்கென ஒரு காணி கச்சேரி உருவாக்கப்படவில்லை. காணிகள் வழங்கப்படவும் இல்லை.

தொடர்ந்தும் மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்கள், வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து வடமாகாண சபையின் நிதியை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனக்கூறினார்.

ஆளுங்கட்சி உறுப்பினர் எஸ்.பிரிமுஷ் சிராய்வா கருத்துத் தெரிவிக்கையில்,

வடமேல் மாகாண சபையில் தற்போது மன்னார் கல்வி வலயத்துக்குட்பட்ட 6 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இப்பாடசாலைகளுக்கு 118 ஆசிரியர்களுக்கான பதவிகளும் உண்டு. தற்போது அங்கு 2075 மாணவர்கள் கல்வி கற்பதுடன், 162 ஆசிரியர்கள் அங்கு கடமையாற்றுகின்றார்கள்.

44 ஆசிரியர்கள் மேலதிகமாக தேவைக்கு மேலதிகமாக கடமையாற்றுகின்றனர். மன்னார் மாவட்டத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆசிரியர்களின் தேவையும் கூட காணப்படுகின்றன.

ஆனாலும் இந்த ஆசிரியர்கள் அரசின் செல்வாக்கு காரணமாக வடமேல் மாகாணம் சென்று சும்மா இருந்து கொண்டு சம்பளத்தைப் பெறும் நிலமையே காணப்படுகின்றது. இதேபோல் கல்விசார சிற்றூழியர்கள் ஆறு பாடசாலைகளிலும் 18 பேர் கடமையாற்றுகின்றார்கள்.

இதில் எட்டுப் பேர் ரிஷாத் பதியுதின் பாடசாலையில் கடமையாற்றுகின்றார்கள். இத்தகைய நிலைமையில் தொடர்ந்தும் அங்கு இப்பாடசாலையை இயங்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

சபையில் ஏற்பட்ட குழப்பநிலையையடுத்து, அதற்குப் பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா,

இந்தாண்டுடன் வடமாகாண சபையின் நிதியுதவியுடன் வடமேல் மாகாணத்தில் இயங்கும் பாடசாலைகள் மூடப்படும். அதில் கடமையாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அவர்கள் வட மாகாணத்துக்கு வந்தால் அவர்களுடைய பதவிகள் வழங்கப்படும்.

அடுத்தாண்டு முதல் அந்தப் பாடசாலைகளை வடமேல் மாகாண சபையிடம் கையளிக்கப்படும் என்றார்.

Related Posts