Ad Widget

புதுக்குடியிருப்பு காணிகளையும் அபகரிக்கிறது இராணுவம்

ARMY-SriLankaபுதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிழக்கு கிராமத்தில் உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட பொதுமக்களுக்குச் சொந்தமான ஏழே முக்கால் ஏக்கர் காணி இராணுவ தேவைக்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரினால் கையெழுத்திட்டு ஒட்டப்பட்டுள்ள அறிவித்தல் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானது என்று பிரதேச செயலகத்தில் காணி உரிமையாளர்கள் உரிமை கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், இந்தக் காணிகளுக்கு உரிமை கோருபவர்கள் எவரும் இல்லை என குறிப்பிட்டு, இந்தக் காணிகள் இலங்கை இராணுவப் படையணியின் 682 ஆம் பட்டாலியனின் தலைமையகத் தேவைக்காக எடுக்கப்படவுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் வீதியையும், கிழக்கில் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியையும், தெற்கு மேற்கு ஆகிய பகுதிகளில் வைத்தியசாலை வீதிகளையும் இந்த ஏழே முக்கால் ஏக்கர் காணிகள் எல்லைகளாகக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிவித்தலில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

இந்தக் காணிகள் பொன்னம்பலம் வைத்தியசாலை உட்பட 19 பேருக்குச் சொந்தமான காணிகள் என்றும், இவற்றுக்குரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும், அந்தக் காணிகளின் உரிமையளார்கள், தமது காணிகளுக்கு உரிமை கோரி, தங்களை அந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்காக இராணுவத்திடமிருந்து அவற்றைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படாமல், இராணுவ தேவைக்காக இந்தக் காணிகளை எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தனியாருக்குச் சொந்தமானது என கூறப்படுகின்ற பொன்னம்பலம் வைத்தியசாலை இறுதி யுத்தத்த்தின்போது விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், அவிடத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு நிலைகொண்டுள்ள இராணுவத்தின் முகாம் விஸ்தரிப்புக்காகவே இந்தக் காணிகளை எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts