Ad Widget

புதிய மின்பிறப்பாக்கி மூலம் 24 மெகா வாற்ஸ் மின்சாரம்; ஜனவரி முதல் குடாநாட்டில் மின்வெட்டு ஏதும் இருக்காதாம்

சுன்னாகம் மின் நிலையத்தில் இருந்து ஜனவரி மாதம் முதல் குடாநாட்டுக்குப் புதிதாக 24 மெகா வாற்ஸ் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மின்விநியோகத்துக்கெனப் புதிய மின் பிறப்பாக்கி ஒன்று அண்மையில் கப்பல் மூலம் காங்கேசன்துறைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து சுன்னாகம் மின்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

24 மெகா வாற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இந்த மின் பிறப்பாக்கியைப் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து ஜனவரி முதல் குடாநாட்டுக்கு இந்த மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்தப் புதிய மின்பிறப்பாக்கி மூலமான பரீட்சார்த்த மின்விநியோகம் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது குடாநாட்டில் மின்விநியோகம் அடிக்கடி தடைப்பட்டு வருவதால் மக்கள் தமது அன்றாடப் பணிகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நேரத்திலும் இந்த மின்தடை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் மின்வெட்டு இல்லாமல் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதற்காகவே இந்தப் புதிய மின்பிறப்பாக்கி மூலம் ஜனவரி முதல் மின்விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts