Ad Widget

புதிய ஜனாதிபதி தெரிவு இன்று! நாடாளுமன்றத்தை சுற்றி பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ அல்லது பொதுக் கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும். மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றமும் தமது கடமைகளைச் செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் இடமளிக்க வேண்டும்.

தடுக்க முயற்சிக்க கூடாது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts