Ad Widget

புதிய கட்டடத்தொகுதிக்கு அடிக்கல் நாட்டினார் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

242 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காலை 9.45 மணிக்கு நட்டார்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் திருமதி தாரணி கணேசானந்தன் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்த அபிமன்னசிங்கம், யாழ்யாப்பணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

நல்லை ஆதின குருமுதல்வர் சிறிலசிறி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் நாகவிகராதிபதி ஆகியோர் ஆசி வழங்கிவைத்தனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.

தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் 3 மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படுகிறது.

அதில் இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டது. கட்டடத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஒப்பத்தின் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை நிறுவனத்தால் (CECB) இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.

Related Posts