Ad Widget

புதிய ஆட்சியில் நீதியை நிலைநாட்டுக! – சபையில் சம்பந்தன் வலியுறுத்து!

“புதிய அரசின் ஆட்சியில் நாட்டில் ஜனநயாகம், சமத்துவம், நீதி என்பன நிலைநாட்டப்படவேண்டும். இந்த இலக்கை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை சபாநாயகருக்கு வழங்கும்” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தலைமையில் கூடியது. இதையடுத்து சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட கரு ஜயசூரிய எம்.பிக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் உயரிய சபைக்கு நீங்கள் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அரசியல் உரிமை, சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் உரிமை ஆகியவற்றைக் காப்பவராக நீங்கள் இருக்கின்றீர்கள். அரசியல் அனுபவம் மிக்க ஒருவர் சபை உறுப்பினர்களையும் நியாயமாக நடத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

நாட்டின் முக்கியமான தருணத்தில்தான் நீங்கள் சபாநாயகராகப் பதவியேற்றுள்ளீர்கள். நீண்டகாலம் யுத்தம் இடம்பெற்று முரண்பாடுகள் காணப்பட்டன. யுத்தத்தால் நாம் துன்பப்பட்டோம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அதை மீண்டும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் நாட்டில் நீதி, இறைமையை நிலைநாட்டத்தான் ஜனவரி 8ஆம் திகதி தமது வாக்குகளை அளித்தனர்.

இந்த நாடாளுமன்றமானது முக்கிய விவாதத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. புதிய ஆட்சியின் கீழ் ஜனநாயகம், சமத்துவம், நீதி என்பன நிலைநாட்டப்படவேண்டும். சகல மக்களும் உரிமை, இறைமை உடையவர்களாக இருக்கவேண்டும். இந்தப் பொறுப்புகளை நீங்கள் மதித்து செயற்படுவீர்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த இலக்குகளை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு முழு ஆதரவை வழங்கும்” – என்றார்.

Related Posts