Ad Widget

புதன்கிழமை கூட்டமைப்பை சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இவருடன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் மன்பிரீட் சிங்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இவர்கள் இந்த விஜயத்தின்போது அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளனர் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது ஜனநாயக ஆட்சி, நல்லிணக்கம் மற்றும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இவர்கள் கலந்துரையாடுவார்கள் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது, இவர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதுடன், பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுடன் கலந்துரையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிஷா பிஸ்வாலும் அவருடன் வரும் மன்பிரீட் சிங்கும் புதன்கிழமை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளனர் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நாளைமறுதினம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தல், போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பு அவசியம் மற்றும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும் உள்ளிட்ட முக்கிய விடயங்களை நிஷா பிஸ்வாலிடம் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எடுத்துரைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு மேற்கொள்ளும் ஐந்தாவது பயணம் இதுவாகும்.

Related Posts